தர்மபுரி
மூத்த முன்னோடிகள் 1,588 பேருக்கு பொற்கிழி
|தர்மபுரியில் தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகள்1588 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
தர்மபுரியில் தி.மு.க. சார்பில் மூத்த முன்னோடிகள்1588 பேருக்கு பொற்கிழிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
பொற்கிழி வழங்கும் விழா
தர்மபுரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,588 பேருக்கு பொற்கிழி வழங்கினார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
தமிழக முழுவதும் குற்றப் பயணம் மேற்கொண்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி வருகிறேன். அதன்படி மாநில முழுவதும் 32 மாவட்டங்களில் மொத்தம் ரூ.41 கோடி பொற்கிழி வழங்கி உள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. உங்களை பார்க்கும்போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை உங்கள் உருவங்கள் மூலம் பார்க்கிறேன். தி.மு.க.வின் வலுவான அணியாக திகழும் இளைஞர் அணிக்கு நீங்கள் வழி காட்ட வேண்டும். இளைஞர்களை நீங்கள் வாழ்த்த வேண்டும்.
மாநில மாநாடு
இளைஞர் அணி சார்பில் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரலாற்று திருப்புமுனை மாநாடாக அமைய உள்ளது. இப்படி ஒரு மாநாடு இதுவரை நடந்ததில்லை. இனிமேலும் நடக்கப் போவதில்லை என்ற அளவுக்கு மிகச் சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். இந்த மாநாட்டில் நீங்கள் அனைவரும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்த வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
விழாவில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி. க்கள் எம்.ஜி. சேகர், தாமரைச்செல்வன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் தர்மச்செல்வன், சத்தியமூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், ஆர். சிவகுரு, மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன், மாவட்ட பொருளாளர்கள் எம்.எம். முருகன், தங்கமணி, மாவட்ட துணை செயலாளர்கள் உமா சங்கர், வக்கீல் ஆ. மணி, ஆறுமுகம், ரேணுகாதேவி, ராஜகுமாரி, கிருஷ்ணகுமார், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, சார்பு அமைப்பு மாவட்ட அமைப்பாளர்கள் தடங்கம் இளைய சங்கர், பெரியண்ணன், பெருமாள், முத்துலட்சுமி, பொன்மகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
2 இடங்களில் நூலகம்
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்டிக்கரை மற்றும் தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி ஆகிய இடங்களில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாக்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தைத் திறந்து வைத்து அங்குள்ள புத்தகங்களை பார்வையிட்டார். அப்போது அந்த விழாவில் கலந்து கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.