காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு
|காஞ்சீபுரம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத்தில் 155 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
லோக் அதாலத்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணையக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைப்படி, காஞ்சீபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்தலின்படி, நேற்று காஞ்சீபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆர்ஜித வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும்.
155 வழக்குகளுக்கு தீர்வு
அதன்படி, நேற்று 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் கையாளப்பட்டு, 155 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.1 கோடியே 54 லட்சத்து 55 ஆயிரத்து 200 இழப்பீடாக வழங்கப்பட்டது. முதல் அமர்வில், நல்லூர் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த விஜயபாஸ்கர் என்பவர் குடும்பத்திற்கு 24 லட்சத்து 17 ஆயிரமும், புஞ்சை அரசன்தாங்கல் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்த நபருக்கு ரூ.2 லட்சத்து 85 ஆயிரம், சுங்குவார்சத்திரம் பகுதியில் சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவருக்கு ரூ.3 லட்சமும், அதே விபத்தில் சிறு காயம் அடைந்த துரைமுருகன் என்பவருக்கு ரூ.30 ஆயிரத்துக்கான காசோலைகளை நீதிபதி செம்மல் உள்ளிட்டோர் வழங்கினர்.
இந்நிகழ்வில் சட்ட பணி குழு தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான அருண்சபாபதி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, நீதித்துறை நடுவர் வாசுதேவன், அரசு வழக்கறிஞர் தம்பிரான், வழக்கறிஞர்கள் வடிவேல், சம்பத், சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, பழனி, குணசேகரன், மற்றும் வழக்கு சம்பந்தப்பட்ட நபர்கள், நீதித்துறை ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.