< Back
மாநில செய்திகள்
பொள்ளாச்சி, வால்பாறையில் 15,466 வாக்காளர்கள் நீக்கம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

பொள்ளாச்சி, வால்பாறையில் 15,466 வாக்காளர்கள் நீக்கம்

தினத்தந்தி
|
10 Nov 2022 12:15 AM IST

பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 15,466 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 15,466 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

வரைவு பட்டியல்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி, கடந்த 7-ந்தேதி நிறைவடைந்தது.

இதை தொடர்ந்து பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. சப்-கலெக்டர் பிரியங்கா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பார்வையிட்டார். மேலும் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம், தாசில்தார்கள் வைரமுத்து, மாரீஸ்வரன், ஜோதிபாசு, மற்றும் தேர்தல் பிரிவு துணை தாசில்தார்கள், அரசியல் கட்சியினர் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

வாக்காளர்கள் நீக்கம்

பொள்ளாச்சி, வால்பாறை சட்டசபை தொகுதிக்கு கடந்த ஜனவரி மாதம் 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 1,09,077 பேரும், பெண்கள் 1,19,079 பேரும், மற்றவை 43 சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 199 வாக்காளர்களும், வால்பாறை தொகுதியில் ஆண்கள் 98,727 பேரும், பெண்கள் 1,07,827 பேரும், மற்றவை 21 சேர்த்து மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 575 வாக்காளர்களும் இருந்தனர். இதற்கிடையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி பொள்ளாச்சி தொகுதியில் ஆண்கள் 1,06,178 பேரும், பெண்கள் 1,15,551 பேரும், மற்றவை 42 பேரும் சேர்த்து 2 லட்சத்து 21 ஆயிரத்து 771 பேர் உள்ளனர்.

வால்பாறை

வால்பாறை தொகுதியில் ஆண்கள் 94325 பேரும், பெண்கள் 1,03191 பேரும், மற்றவை 21 சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 537 பேர் உள்ளனர். பொள்ளாச்சி தொகுதியில் 6428 பேரும், வால்பாறையில் 9038 பேர் சேர்த்து மொத்தம் 15,466 பேர் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலில் தயாரிக்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது. சிறப்பு முகாம்கள் உள்பட பல்வேறு வகைகளில் பெயர் சேர்ப்பு, நீக்கம் தொடர்பாக பெறப்படும் மனுக்கள் மீதான பரிசீலனை அடுத்த மாதம் 26-ந்தேதி நிறைவுபெறுகிறது. இதை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 5-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்