< Back
மாநில செய்திகள்
153 பள்ளி மாணவர்கள் மொட்டையடித்து காந்தி போன்று வேடம் அணிந்து பேரணி
மாநில செய்திகள்

153 பள்ளி மாணவர்கள் மொட்டையடித்து காந்தி போன்று வேடம் அணிந்து பேரணி

தினத்தந்தி
|
1 Oct 2022 10:19 PM GMT

காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி 153 பள்ளி மாணவர்கள் காந்தி போன்று வேடமிட்டு விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியப்படி பேரணியாக சென்றனர்.

'மகாத்மாவை கொண்டாடுவோம்'

தமிழக அரசின் அருங்காட்சியகத்துறை மற்றும் காந்தி உலக மையம் சார்பில் காந்தியின் 153-வது பிறந்தநாளையொட்டி 'மகாத்மாவை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சி எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று நடந்தது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 153 மாணவர்கள் மொட்டை அடித்து கொண்டு காந்தியை போன்று வேடம் அணிந்து விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தியபடி அருங்காட்சியக வளாகத்தில் பேரணியாக சென்றனா். தொடர்ந்து அங்குள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கண்காட்சி கூடத்தில் காந்தி கைப்பட எழுதிய கடிதம், டெலிகிராம், அவரது நினைவில் வெளியிடப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், அரிய புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. சுதந்திர தின அமுதப்பெருவிழாவையொட்டி 75 சுதந்திர போராட்ட வீரரர்கள் குறித்த விளக்க கண்காட்சியை, முன்னாள் அமைச்சர் கக்கனின் பேத்தியும், சென்னை மேற்கு மண்டல போலீஸ் இணை கமிஷனருமான ராஜேஸ்வரி திறந்து வைத்து பேசும்போது, 'மாணவர்கள் காந்தி போன்று வேடமிட்டு இருந்தால் மட்டும் போதாது, சமுதாயத்தில் காந்திய சிந்தனையை விதைப்பதுடன், காந்தியை போன்று வாழ்ந்தும் காட்ட வேண்டும்' என்றார்.

பள்ளி குழந்தைகள் சபதம்

சினிமா இயக்குனர் உதயம் (எ) ராமதாஸ் பேசும்போது, 'லஞ்சம், மது, ரவுடியிசம்' இவை மூன்றும் காந்திக்கு பிடிக்காதவை. இவற்றை நாட்டில் இருந்து முற்றிலும் ஒழிக்க குழந்தைகளால் மட்டுமே முடியும். காந்தி ஜெயந்தி அன்று அனைத்து பள்ளி குழந்தைகளும் தங்களுடைய தந்தையிடம் லஞ்சம், மது, ரவுடியிசம் ஆகிய 3 செயல்களிலும் ஈடுபட மாட்டேன் என்று சபதம் செய்து உறுதிமொழி ஏற்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து சென்னை வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையர் நந்தகுமார், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் பேரன் எச்.நடராஜன், எத்திராஜ் கல்லூரி தலைவர் முரளி, நடிகர் ரமேஷ் கண்ணா, வெங்கடாசலம், அனந்த கிருஷ்ணன், உதவி இயக்குனர் காந்திமதி மற்றும் சுந்தரராமன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

மேலும் செய்திகள்