< Back
மாநில செய்திகள்
ஒரே நாளில் 1,500 பேருக்கு காய்ச்சல்
கடலூர்
மாநில செய்திகள்

ஒரே நாளில் 1,500 பேருக்கு காய்ச்சல்

தினத்தந்தி
|
20 Sept 2022 1:29 AM IST

கடலூர் மாவட்டத்தில் காய்ச்சல் மின்னல் வேகத்தில் பரவுகிறது. நேற்று ஒரே நாளில் அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் 1,500 பேருக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் காய்ச்சல்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அதனால் ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சளி, காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியை தேடி செல்கிறார்கள். இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மட்டும் கடந்த ஒரு வாரமாக தினசரி 500-க்கும் மேற்பட்டோர் சளி, காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் சிறுவர்களே அதிகளவில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறுவர்கள் உள்பட 146 பேர் அனுமதி

அந்த வகையில் தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 400-க்கும் மேற்பட்டோருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 21 சிறுவர்கள் உள்பட 61 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையே நேற்றும் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 600-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.

இதனால் பதிவு சீட்டு வாங்கும் இடத்தில் நோயாளிகள் கூட்டம் அலைமோதியது. இவர்களில் பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர். இதில் 3 நாட்களுக்கு மேல் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவிக்கப்பட உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம் பகுதியில் 85 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு ஆஸ்பத்திரிகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1,500 பேருக்கு காய்ச்சல் சிகிச்சை

மேலும் மாவட்டம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று மட்டும் சளி, காய்ச்சலுக்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தவிர தனியார் ஆஸ்பத்திரிகளிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு உடல் வலி இருப்பதாக கண்ணீருடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாவட்டத்தில் பரவும் வைரஸ் காய்ச்சலை தடுக்கும் வகையில் சுகாதாரத் துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்வதுடன், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் அதிகளவில் இருக்கும் பகுதிகளில் முகாமிட்டு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்