கடலூர்
தண்ணீரின்றி 1,500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம்
|வடலூா் அருகே தண்ணீரின்றி 1,500 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் வெயிலில் கருகும் அபாய நிலை உள்ளதால் விவசாயிகள் கண்ணீரால் கவலையில் மூழ்கி வருகின்றனர்.
வடலூர்
பெரிய ஏரி
வடலூர் அருகே உள்ள கருங்குழி, மேலகொளக்குடி, கோட்டகம் உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கி சுமார் 260 ஏக்கர் பரப்பளவு கொண்ட இசா பெரிய ஏரி உள்ளது. கடந்த காலங்களில் இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் ஊத்தங்கால், வெள்ளூர், ஊமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வடிகால் வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வரும். ஏரியில் நிரம்பி வழியும் தண்ணீர் நாட்டேரி என்கிற வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி வழியாக கடலூர் கடலில் சென்று கலக்கும்.
இந்த ஏரியின் மூலம் மேலக்கொளக்குடி, கருங்குழி உள்ளிட்ட 3 கிராமங்களில் உள்ள 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இதில் ஒருபோகம் சம்பா நெற்பயிரும், தொடர்ந்து மீதம் இருக்கும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு எள், மணிலா உள்ளிட்ட பயிரையும் விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர்.
நீர் ஆதார வழிகள் தடைபட்டது
இந்த நிலையில் என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இயற்கை நீர் ஆதார வழிகள் தடைபட்டது. இதைத் தொடர்ந்து என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் ஏரிக்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து மீண்டும் ஏரி நிரம்பியது.
இதையடுத்து ஒருபோக சாகுபடி என்ற நிலை மாறி சம்பா, குறுவை என 2 போக சாகுபடி நடைபெறும் பகுதியாக மாறியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக என்.எல்.சி. நிறுவனம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றும் தண்ணீரை இசா பெரிய ஏரிக்கு விடவில்லை என கூறப்படுகிறது.
விவசாயிகள் கவலை
இதனால் தண்ணீரின்றி ஏரி வறண்டு கிடக்கிறது. போதிய தண்ணீர் கிடைக்காததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக விவசாய நிலங்கள் தரிசாக மாறி செடி, கொடிகள் வளர்ந்து நிற்கின்றன. மேலும் மழையை நம்பி தற்போது சாகுபடி செய்த சம்பா நெற்பயிரும் தண்ணீரின்றி வெயிலில் கருகி வருகிறது. சாகுபடி செய்த விவசாய நிலங்கள் பாளம், பாளமாக வெடித்து காய்ந்து கிடப்பதை பார்க்க முடிகிறது. தங்கள் கண் எதிரே சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி வருவதை விவசாயிகள் பார்த்து கண்ணீர் வடித்து கவலையில் மூழ்கி வருகிறார்கள்.
இயற்கையாக கிடைக்கும் மழைநீர் மூலமாகவும் ஏரி நிரம்ப வழி இல்லை. தற்போதைய நிலையில் என்.எல்.சி. கழிவுகளால் ஏரி தூர்ந்து மேடாகி வருகிறது.
கேள்விக்குறியாகிவிட்டது
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக ஏரிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர் சாகுபடி கேள்விக்குறியாகி விட்டது. இருப்பினும் மழையை நம்பி கடன் வாங்கி சம்பா சாகுபடி செய்தோம். தற்போது தண்ணீர் இல்லாததால் பயிர்கள் எங்கள் கண் முன்னே கருகி வருவதை பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் பயிர் சாகுபடியை கைவிட வேண்டி நிலைதான் உருவாகும். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடி தண்ணீர் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.