சேலம்
150 டவுன் பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி
|சேலம், தர்மபுரியில் 150 டவுன் பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்று சேலம்கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறினார்.
சேலம், தர்மபுரியில் 150 டவுன் பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது என்று சேலம்கோட்ட அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி கூறினார்.
முன்கூட்டியே அறிவிக்கும் வசதி
சேலம் கோட்டத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு டவுன் பஸ்களில் காலை முதல் இரவு வரை பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். தற்போது அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் பெண்கள் கூட்டம் மேலும் அதிகம் காணப்படுகிறது.
பயணிகள் கூட்ட நெரிசல் இருப்பதால் பஸ் நிறுத்தம் குறித்து கண்டக்டர் அறிவித்தாலும் பயணிகள் சத்தத்தில் குறிப்பிட்ட நிறுத்தத்தில் பலர் இறங்க முடிவதில்லை.
இதனால் வேறு பஸ் நிறுத்தத்தில் இறங்கும் நிலை ஏற்படுகிறது. இதைதவிர்க்க சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ளது போன்று, அரசு டவுன் பஸ்களில், பஸ் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் வசதியை சேலம் கோட்டத்தில் முதற்கட்டமாக சேலம், தர்மபுரியில் தொடங்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட மேலாண்மை இயக்குனர் பொன்முடியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-
பஸ் நிறுத்தம்
சேலம் கோட்டத்தில் உள்ள அரசு டவுன் பஸ்களில் பஸ் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி முதல் கட்டமாக சேலத்தில் 100 டவுன் பஸ்களிலும், தர்மபுரியில் 50 பஸ்களிலும் என மொத்தம் 150 பஸ்களில் இன்னும் ஒரு மாதத்தில் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
சேலம் கோட்டத்தில் அலுவலர்கள், பணியாளர்கள், டிரைவர், கண்டக்டர்கள் என 12 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட வசதியாக தகுதியானவர்களுக்கு இன்று (நேற்று) போனஸ் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு இனிப்பும் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி போனஸ் ரூ.9½ கோடியும், முன்பணம் ரூ. 6½ கோடியும் என மொத்தம் ரூ.16 கோடி தொகை ஊழியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.