சென்னைக்கு 150 கி.மீ. தொலைவில் 'மிக்ஜம்' புயல்..!!
|'மிக்ஜம்' புயல் தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல் சென்னைக்கு கிழக்கே 150 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. தற்போது 13 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் நகர்ந்து வருகிறது. இந்த புயலானது வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நோக்கி வடமேற்கு திசையில் நகர்ந்து, பின் நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே 5-ம் தேதி மாலை கரையைக் கடக்க உள்ளது.
'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை மையம் சார்பில் அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர் உள்பட 12 மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை நீடித்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.