விருதுநகர்
ரேஷன் வினியோகத்திற்கு 15 ஆயிரம் டன் கோதுமை தேவை
|தமிழகத்தில் ரேஷன் வினியோகத்திற்கு 15 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படுவதால் மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ரேஷன் வினியோகத்திற்கு 15 ஆயிரம் டன் கோதுமை தேவைப்படுவதால் மத்திய அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழங்கல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோதுமை வினியோகம்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் 2.39 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் அரிசி மற்றும் கோதுமை வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதிலாக கோதுமை வாங்கிக் கொள்ளலாம்.
அதன்படி பெருநகரங்களில் வசிப்போருக்கு 10 கிலோ மற்றும் நகர்புறங்களில் வசிப்போருக்கு 5 கிலோ வரையிலும் கோதுமை வழங்கப்பட்டு வந்தது. இதற்கிடையே மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்திற்கு மாதந்தோறும் 13,485 டன் கோதுமை வழங்கப்பட்டு வந்த நிலையில் இதனை படிப்படியாக குறைத்தது.
கூடுதல் ஒதுக்கீடு
தற்போது மாதந்தோறும் 8,500 டன்கோதுமை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 முதல் 3 கிலோ வரை மட்டுமே கோதுமை வினியோகிக்கப்படுகிறது.
தற்போது ரேஷன் கார்டு தாரர்களுக்கு கோதுமை வினியோகிக்கப்பட கூடுதல் கோதுமை தேவைப்படுவதால் கூடுதல் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. குறைந்தபட்சம் மாதம் 15 ஆயிரம் டன் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.