< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் சிறைபிடிப்பு

தினத்தந்தி
|
10 July 2023 12:10 AM IST

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது.

ராமேசுவரம்,

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை நடுக்கடலில் சிறைபிடித்தது. 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து அத்துமீறலில் ஈடுபட்டது.

15 மீனவர்கள் கைது

ராமேசுவரம் பகுதியில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சில நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

காற்றின் வேகம் ஓரளவு குறைந்த நிலையில், ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து நேற்று முன்தினம் 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

ராமேசுவரத்தில் இருந்து கிரீன்ஸ் மற்றும் பாலா ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளும் கடலுக்கு சென்றிருந்தன. இந்த படகுகளில் கிறிஸ்து (வயது 40), ஆரோக்கிய ராஜ் (52), ஜெர்மஸ் (33), ஆரோக்கியம் (38), ரமேஷ் (28), ஜெகன் (40), பிரபு (36) பிரியன் ரோஸ் (44), ஜார்ஜ் (30), அந்தோணி (45), பிரதீபன் (35), ஈசாக் (35), ஜான் (30), ஜனகர் உள்ளிட்ட 15 மீனவர்கள் இருந்தனர்.

அந்த 15 ேபரையும் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று, மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் சென்றிருந்த 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

2 விசைப்படகுகள் பறிமுதல்

கைதானவர்களை இலங்கை காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இலங்கை கடற்படை கைது செய்திருந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த 22 மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மீண்டும் ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் நடுக்கடலில் சிறைபிடிக்கப்பட்டு, அவர்களது 2 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறிய நடவடிக்கை தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைதான 15 மீனவர்களும் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களை வருகிற 21-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி கஜநதி பாலன் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து 15 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்