< Back
மாநில செய்திகள்
ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் கைது: இலங்கைக்கு, வைகோ கண்டனம்
மாநில செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் கைது: இலங்கைக்கு, வைகோ கண்டனம்

தினத்தந்தி
|
11 July 2023 12:41 AM IST

ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் கைது: இலங்கைக்கு, வைகோ கண்டனம்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ராமேசுவரம் துறைமுக பகுதியிலிருந்து கடந்த 8-ந்தேதி 461 விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய கடல் பகுதியில்தான் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். ராமேசுவரத்திலிருந்து சென்ற 15 மீனவர்களையும் எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதும், அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பதும் கண்டனத்துக்குரியது.

கடந்த ஜூன் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இனிமேல், எல்லைதாண்டி வந்து மீன்பிடிக்கக்கூடாது, அவ்வாறு மீண்டும் கைதானால் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் மீனவர்களை விடுதலை செய்யப்பட்டனர்.

தற்போது மீண்டும் நமது மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக பொய்யான குற்றம் சாட்டி சிங்கள கடற்படை கைது செய்துள்ளதால், நீதிமன்றத்தின் மூலம் சிறைத்தண்டனை அளிக்க இலங்கை அரசு குறியாக இருக்கும். எனவே, மத்திய அரசு உடனே தலையிட்டு தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசுக்கு அறிவுறுத்தவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்