என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரிப்பு
|என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட 15 சதவீதம் அதிகரித்துள்ளது.
என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை
என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டு, அதில் இடங்களை தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடப்பாண்டில் 442 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த இடங்களில் சேருவதற்கு 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர், துணை கலந்தாய்வும் நடத்தி முடிக்கப்பட்டன.
அதன்படி, கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களில், ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 620 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகமாக மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
முக்கிய பிரிவுகளில்...
அதிலும் என்ஜினீயரிங் படிப்புகளில் முக்கிய பிரிவுகளில் கடந்த ஆண்டைவிட அதிகமான மாணவர்கள் சேர்ந்திருப்பது புள்ளி விவரங்கள் வாயிலாக தெரிய வந்துள்ளது. அதன்படி, சிவில் என்ஜினீயரிங் பிரிவில் 10 ஆயிரத்து 808 இடங்களில் 4 ஆயிரத்து 772 இடங்கள் நிரம்பியுள்ளன. இது 44 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் இந்த பிரிவில் 28 சதவீதம் இடங்களே நிரம்பியிருந்தன.
அதேபோல், மெக்கானிக்கல் பிரிவில் 19 ஆயிரத்து 277 இடங்களில் 10 ஆயிரத்து 51 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இது 52 சதவீதம் ஆகும். இந்த பிரிவில் கடந்த ஆண்டில் 35 சதவீத இடங்கள் நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் பிரிவில் 63 சதவீதம், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவில் 77 சதவீதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், செயற்கை நுண்ணறிவு பிரிவுகளில் தலா 84 சதவீதம், தகவல் தொழில்நுட்பம் பிரிவுகளில் 88 சதவீதம் இடங்களும் நிரம்பி இருக்கின்றன. இந்த பிரிவுகளிலும் கடந்த ஆண்டை விட மாணவர்கள் அதிகம் பேர் சேர்ந்துள்ளனர்.