< Back
மாநில செய்திகள்
டாஸ்மாக் ஊழியர் வீட்டில்  15¾ பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 15¾ பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
17 Dec 2022 6:45 PM GMT

டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 15¾ பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையத்தில் டாஸ்மாக் ஊழியர் வீட்டில் 15¾பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியர் வீட்டில் திருட்டு

கோவையை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் மகாலட்சுமி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன் (வயது 48). டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி ஸ்ரீதேவி (38). சம்பவத்தன்று காலை சந்திரன் மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு சேலத்துக்கு சென்றுவிட்டார். அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர், வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் வெளியே உள்ள கேட் பூட்டப்பட்டிருந்தது.

கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 15¾ தங்க நகை, வெள்ளி குத்து விளக்கு, வெள்ளி கொலுசு, வெள்ளி அரை ஞாண்கயிறு மற்றும் ரூ.2 லட்சம் பணத்தை யாரோ மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

தனிப்படை

இது குறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வநாயகம், முருகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோவையில் இருந்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த இடத்தில் பதிவான விரல் ரேகைகளை பதிவு செய்தனர். மேலும் கோவையிலிருந்து போலீஸ் துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. திருட்டு நடந்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்த போலீஸ் நாய் சிறிது தூரம் ஓடிச் சென்றது.ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் தனிப்படை போலீசார் மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

------------

மேலும் செய்திகள்