சென்னை
பணியின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
|பணியின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த மாதம் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் எந்திரத்தை பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றி வந்தனர். அப்போது ஒப்பந்த தொழிலாளர்கள் நெல்சன் என்ற கட்டாரி (வயது 26) எந்திரத்தின் துளையில் தவறி விழுந்துவிட்டார். அவரை காப்பாற்ற முயன்ற மற்றொரு ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமாரும் (35) எந்திர துளையில் தவறி விழுந்தார். இதில் இருவரும் பரிதாபமாக இறந்துவிட்டனர். இந்த 2 பேரின் குடும்பத்துக்கும் இழப்பீடாக தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் நெல்சன் மனைவி ஜான்சா ஆரோக்கியதாஸ், ரவிகுமார் மனைவி புனிதாவிடம் தலா ரூ.15 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்துக்கான நிவாரணத் தொகை காசோலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று வழங்கினார்.
அப்போது சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.