கன்னியாகுமரி
கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்
|களியக்காவிளையில் கடைகளில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் ரூ.10 ஆயிரம் அபராதம்
களியக்காவிளை,
குமரி மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்ற மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்கிணங்க நாகர்கோவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அறிவுரைப்படி களியக்காவிளை பேரூராட்சி பகுதிகளில் ஒரு வார கால பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி தலைமையில், பேரூராட்சி இளநிலை உதவியாளர் தமிழரசன், இளநிலை பொறியாளர் பத்மதேவன் மற்றும் பணியாளர்கள் களியக்காவிளை சந்தை மற்றும் கறிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசால் தடை செய்யப்பட்ட 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக பைகளை பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் விதிமுறைகளை மீறி ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தும் மற்றும் வினியோகம் செய்யும் கடைகள் கண்டறியப்பட்டால் அந்த கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும். அவ்வாறு சீல் வைத்தால் குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் அபராதத்துடன் மாவட்ட கலெக்டர் அனுமதி பெற்று கடை திறக்க அனுமதிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.