< Back
மாநில செய்திகள்
ெமாபட்டில் எடுத்துச்சென்ற 15 கிலோ தங்கம் சிக்கியது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

ெமாபட்டில் எடுத்துச்சென்ற 15 கிலோ தங்கம் சிக்கியது

தினத்தந்தி
|
31 Aug 2023 12:15 AM IST

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக படகில் கடத்தி வந்து, ராமநாதபுரம் அருகே மொபட்டில் கொண்டு சென்ற 15 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இலங்கையில் இருந்து தனுஷ்கோடி கடல் வழியாக படகில் கடத்தி வந்து, ராமநாதபுரம் அருகே மொபட்டில் கொண்டு சென்ற 15 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

தங்கம் கடத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், தனுஷ்கோடி கடல் பகுதிக்கு அருகில் இலங்கை கடல் பகுதி உள்ளதால் இந்த வழியாக கடத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழகத்தில் இருந்து கடல் அட்டைகள், மஞ்சள், பீடி இலை, போதைப்பொருட்கள், கஞ்சா உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்தப்படுகின்றன. அதே போல் இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. அதிலும் சில மாதங்களாக தங்கக்கட்டிகள் கடத்தல்கள் அதிகரித்து உள்ளன.

நடுக்கடலில் கடற்படை, கடலோர காவல் படை கப்பல்களை கண்டதும் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகளை கடத்தல்காரர்கள் கடலில் வீசியதையும், அதை மூழ்கு நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற வீரர்கள் மூலம் கடலில் இருந்து மீட்டதும் நடந்துள்ளது.

15 கிலோ தங்கம்

இந்நிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 15 கிலோ தங்கக்கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

அதுபற்றிய விவரம் வருமாறு:-.

தங்கக்கட்டிகள் கடத்தப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, ராமநாதபுரத்தில் சுங்கத்துறையினர் நேற்று திருப்புல்லாணி அருகே உள்ள களிமண் குண்டு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு மொபட்டை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த மொபட் பெட்டிக்குள் கிலோ கணக்கில் தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மொபட்டை ஓட்டி வந்த மண்டபத்தை சேர்ந்த சல்மான் என்பவரை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக்கட்டிகளையும், பிடிபட்ட நபரையும் ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். எடை போட்டதில் மொத்தம் 15 கிலோ தங்கம் இருந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும்.

சல்மானிடம் தீவிர விசாரணை நடந்தது. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

முக்கிய நபருக்கு தொடர்பு?

இந்த தங்கக்கட்டிகள் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டதாகும். படகுமூலம் தனுஷ்கோடி கடல் வழியாக கடத்தி கொண்டு வந்துள்ளனர். நேற்று அதிகாலையில் இங்குள்ள கடத்தல் ஏஜெண்டுகளிடம் அவற்றை கொடுத்துள்ளளனர்.

அந்த ஏஜெண்டுகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் மூலம் தங்கக்கட்டிகளை பதுக்கி வைப்பதற்காக சல்மானிடம் கொடுத்துள்ளனர். யாருக்கும் சந்தேகம் வராது என நினைத்து அவர், தங்கக்கட்டிகளை மொபட்டில் எடுத்து வந்து சிக்கியுள்ளார்.

இந்த கடத்தலில் ராமநாதபுரத்தை சேர்ந்த முக்கிய நபருக்கு தொடர்பு உள்ளது. சல்மானின் செல்போனை கைப்பற்றி அவர் யார்-யாருடன் பேசி உள்ளார்? என்பது குறித்த தகவல்களையும் திரட்டி வருகிறோம்.

விரைவில் கைது

இலங்கையில் இருந்து யார் மூலமாக தங்கக்கட்டிகள் கடத்தி சர்வதேச கடல் எல்லை வரை கொண்டு வரப்பட்டது, அங்கிருந்து படகு மூலம் தனுஷ்கோடி கடற்கரைக்கு யார்-யார் கடத்தி வந்தார்கள்? என்ற விவரங்களையும் சேகரித்துள்ளோம். தங்கம் கடத்தலில் தொடர்புடைய அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளான மண்டபம், வேதாளை, பாம்பன், களிமண் குண்டு உள்ளிட்ட இடங்களில் கடத்தல் தங்கக்கட்டிகள் அடிக்கடி கிலோ கணக்கில் பிடிபடுவது போலீசாரையும், அதிகாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

-----------------

மேலும் செய்திகள்