< Back
மாநில செய்திகள்
புளியந்தோப்பில் நள்ளிரவில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் - போக்குவரத்து மாற்றம்
சென்னை
மாநில செய்திகள்

புளியந்தோப்பில் நள்ளிரவில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் - போக்குவரத்து மாற்றம்

தினத்தந்தி
|
27 Nov 2022 2:31 PM IST

புளியந்தோப்பில் நள்ளிரவில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை புளியந்தோப்பு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதிகாலை 2 மணி அளவில் புளியந்தோப்பில் பெரம்பூர் பேரக்ஸ் சாலை-அஷ்டபூஜம் சாலை சந்திப்பு அருகே சாலையில் சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தலைமை என்ஜினீயர் ராமசாமி, பகுதி என்ஜினீயர் வைதேகி, உதவி என்ஜினீயர் சுரேஷ்குமார் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அதில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில் பூமிக்கு அடியில் செல்லும் சுமார் 3 அடி அகலம் கொண்ட கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்து கழிவுநீர் வெளியேறியதால் மண் அரிப்பு ஏற்பட்டு அதன்காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதே பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோல் ராட்சத பள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பள்ளத்தை சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைத்து, பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சாலையில் ஏற்பட்டபள்ளத்தை மூடி சீரமைக்க ஒரு வாரம் ஆகலாம் என தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துமுற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி பட்டாளம் பகுதியில் இருந்து டவுட்டன் நோக்கி செல்லும் வாகனங்கள் ஓட்டேரி பிர்க்கிளின் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. எழும்பூர், புரசைவாக்கம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி நோக்கி வரும் வாகனங்கள் புரசைவாக்கம் மற்றும் சூளை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

வடசென்னைக்கு செல்லும் மிக முக்கியமான இந்த சாலையில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். எனவே நள்ளிரவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாலும், அந்த நேரத்தில் ஒரு சில வாகனங்கள் மட்டும் சென்றதாலும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பகலிலேலோ, வாகனங்கள் செல்லும்போதே பள்ளம் ஏற்பட்டு இருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும்.

மேலும் செய்திகள்