< Back
மாநில செய்திகள்
கைதான மேலும் 173 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கைதான மேலும் 173 பேருக்கு 15 நாள் காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
2 Aug 2022 5:21 PM GMT

கனியாமூர் தனியார் பள்ளியில் நடந்த கலவர வழக்கில் கைதான மேலும் 173 பேரின் காவலை 15 நாட்களுக்கு நீடித்து கள்ளக்குறிச்சி கோர்ட்டு உத்தரவிட்டது

கள்ளக்குறிச்சி

கலவர வழக்கு

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த சம்பவத்தில் மாணவியின் மர்ம சாவு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், வன்முறை சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த இரு சம்பவம் தொடர்பாக இதுவரை 322 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காவல் நீட்டிப்பு

இந்த நிலையில் கலவர வழக்கு தொடர்பாக கடந்த 19-ந் தேதி கைதாகி கடலூர், வேலூர் மற்றும் திருச்சி மத்திய சிறையில் இருக்கும் 2 பெண்கள் உள்பட 173 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து அவர்களை காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

அவர்களை மேலும் 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி முகமது அலி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீ்ண்டும் அந்தந்த சிறையிலேயே அடைக்கப்பட்டனர்.

திருச்சி சிறையில்

அதேபோல் நேற்று முன்தினம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கலவர வழக்கில் கைதான ராமலிங்கம், சரண்குரு, கோபு, மணிகண்டன், பிரதீப் ஆகிய 5 பேரையும் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

இவர்களிடம் கலவரத்திற்கு யார் காரணம்?, கலவரத்தை தூண்டி விட்டவர்கள் யார்? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர். விசாரணை நேற்று முடிந்ததை அடுத்து அவர்கள் 5 பேரையும் மீண்டும் கள்ளக்குறிச்சி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களை மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முகமதுஅலி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்களை சிறப்பு புலனாய்வு போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.



மேலும் செய்திகள்