சென்னை விமான நிலையத்தில் 15 மலைப்பாம்பு குட்டிகள் பறிமுதல்: தாய்லாந்தில இருந்து கடத்தி வந்தவர் கைது
|மீட்கப்பட்ட 15 அரிய உயிரினங்களையும் தாய்லாந்திற்கே மீண்டும் அனுப்பிவைக்க அதிகாரிகள் முடிவுசெய்துள்ளனர்.
சென்னை,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு அதிகாலையில் தாய் ஏர்வேஸ் விமானம் வந்து இறங்கியது. அதில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர் வைத்து இருந்த 2 பிளாஸ்டிக் கூடைகள், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை கிளப்பின. அவற்றை அவர்கள் சோதனையிட்ட போது, அவற்றில் 15 அரியவகை மலை பாம்பு குட்டிகள் மற்றும் அணில் ஒன்றும் இருந்தன.
எந்த விதமான சான்றிதழும் இல்லாமல் அவற்றை கொண்டு வந்த அந்த சென்னை நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, பெசன்ட் நகரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புப் குற்றப்பிரிவு போலீசார், விரைந்து வந்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த கூடைகளில் இருந்தவை பால் பைத்தான் என்னும் அரியவகையைச் சேர்ந்த மலைப்பாம்புகள் என்பது தெரியவந்தது. இவைகள் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் அடர்ந்த வனப்பகுதிகளில் குளிர் பிரதேசங்களில் வாழும் உயிரினங்களாகும்.
இவை விஷமற்றவை என்றாலும் வளரும் போது, ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை ஆகும். இவற்றுடன் ஆப்ரிக்க கண்டத்து அணிலும் பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்தில் இருந்து இவ்வகை பாம்புகள் கடத்தி வரப்பட்டு, பெரும் பணக்காரர்களின் வீடுகளில் செல்லப் பிராணிகளாக வளர்க்க விற்பனை செய்யப்படுகின்றன. இதனை தொடர்ந்து, 15 அரிய உயிரினங்களையும் மீண்டும் தாய்லாந்திற்கே சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பி வைக்க உள்ளனர். அதற்கான செலவை கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.