< Back
மாநில செய்திகள்
142 வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிப்பு
சேலம்
மாநில செய்திகள்

142 வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
6 Feb 2023 1:00 AM IST

சேலம் மாவட்டத்தில் நடந்த கணக்கெடுப்பில் 142 வகையான பறவைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பறவைகள் கணக்கெடுப்பு

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் வனத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை முடிந்தபிறகு பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் மற்றும் மற்ற நிலப்பகுதியில் வாழும் பறவைகள் என 2 வகையாக கணக்கெடுப்பை நடத்தி வருகின்றனர். அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள வனக்கோட்டங்களில் ஈர நிலப்பகுதிகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சேலம் மாவட்ட வனத்துறையில் சேலம் மற்றும் ஆத்தூர் வனக்கோட்டங்களில் 20 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணியை அந்தந்த மாவட்ட வன அலுவலர்கள் தலைமையில் வன ஊழியர்கள், இயற்கை ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பெரியார் பல்கலைக்கழக விலங்கியல் மாணவர்கள் நடத்தினர்.

142 வகையான பறவைகள்

சேலம் வனக்கோட்டத்தில் மூக்கனேரி, ஆனைமடுவு, டேனிஷ்பேட்டை, மேட்டூர் உள்ளிட்ட 9 இடங்களில் வனத்துறையினர் பல்வேறு வகையான லென்ஸ்கள் பொருத்தப்பட்ட கருவிகளை கொண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல், ஆத்தூர் வனக்கோட்டத்தில் மாவட்ட வன அலுவலர் சுதாகர் தலைமையில் 11 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டன.

இந்த கணக்கெடுப்பு முடிவில், நத்தை குத்தி நாரை, வண்ண நாரை, கருப்பு அரிவாள் மூக்கன், நீர்காகம், உண்ணி கொக்கு, செம்பருந்து உள்பட 142 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பறவையினங்கள் குறித்த பட்டியலை வரையறுத்து, அதனை வனத்துறையின் தலைமையிடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்