கடலூர்
14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும்
|10 மீட்டர் சாலையாக மாற்றி அமைக்கப்பட்ட 14 சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அமைச்சர் எ.வ.வேலு கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தமிழ்நாட்டில் இருக்கின்ற 38 மாவட்டங்களில் விபத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். தற்போது 19-வது மாவட்டமாக கடலூர் மாவட்டத்தை ஆய்வு செய்கிறோம். இந்த மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் விபத்தை குறைப்பதில் கடலூர் மாவட்டம் 3-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சென்னையும், 2-வது இடத்தில் மயிலாடுதுறையும் உள்ளது.
சுங்கச்சாவடிகள் ரத்து
தமிழகத்தில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச்செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 20,668 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 1085 விபத்துகள் நடந்துள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். வருங்காலங்களில் விபத்து இல்லாத மாவட்டமாக மாற போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய வேண்டும் என்று 7 முறை மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். 7 மீட்டர் மாநில நெடுஞ்சாலையை இருபுறமும் தலா 1½ மீட்டர் அகலப்படுத்தி 10 மீட்டர் சாலையாக மாற்றி கையகப்படுத்தி, புதிதாக 14 சுங்கச்சாவடிகளை மத்திய அரசு அமைத்து இருக்கிறது. இது தவறு என்று வலியுறுத்தி வருகிறோம். சுங்கச்சாவடிகளை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்துவோம். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
பேட்டியின் போது அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.