திருச்சி
தபால் ஊழியர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளை
|தபால் ஊழியர் வீட்டில் 14 பவுன் நகை கொள்ளைபோனது.
நகைகள் கொள்ளை
திருச்சி கருமண்டபம் ஆர்.எம்.எஸ். காலனி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 52). இவர் புதுக்கோட்டையில் ஒரு கூரியர் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி இந்துமதி(48). இவர் திருச்சி ரெயில்வே ஜங்ஷனில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். பின்னர் மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ள சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 14 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் அஜய்தங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்தனர்.
மேலும் மோப்ப நாய் கொள்ளை நடத்த வீட்டில் இருந்து மோப்பம் பிடித்து ஓடி வீட்டை 2 முறை சுற்றி வந்து சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.