திருவாரூர்
14-ந்தேதி பருத்தி ஏலம்
|14-ந்தேதி பருத்தி ஏலம்
குடவாசல் ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி பருத்தி ஏலம் நடக்கிறது. இதில் விவசாயிகள் பங்கு பெற்று பருத்தியை நல்லவிலைக்கு விற்று பயன்பெறலாம் என குடவாசல் விற்பனை கூட மேற்பார்வையாளர் ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பருத்தி சாகுபடி
காவிரி டெல்டா பகுதிகளில் நெல் அறுவடைக்கு பிறகு பெரிய அளவில் பருத்தி சாகுபடி செய்வது வழக்கம். குடவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள அரசூர், மஞ்சக்குடி, புதுக்குடி, சேங்காலிபுரம், சிமிழி, அன்னவாசல், இலையூர், செல்லூர், காங்கேயநகரம் ஆகிய கிராமங்களில் 20 ஆயிரம் எக்டேருக்கு மேல் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1 மாதத்திற்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ததால் பருத்தி செடிகள் தொடக்கத்தில் பாதிப்படைந்தது.
கடந்த ஆண்டு பருத்திக்கு கூடுதல் விலை கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு ஆள் பற்றாக்குறை காரணமாக எந்திர உதவியுடன் களை வெட்டுதல், மண் அணைத்தல் ஆகிய பணிகளால் கூடுதல் செலவு ஆகியுள்ளது.
நல்ல விலைக்கு விற்பனை
பருத்தி விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் பருத்தியை நன்கு உலர வைத்து குடவாசல் அகர ஓகை அரசு ஒழுங்குமுறை வேளாண் விற்பனை கூடத்தில் வருகிற 14-ந்தேதி (புதன்கிழமை) மாலை 3 மணி அளவில் நடக்கும் பருத்தி ஏலத்தில் பருத்தியை விற்பனை செய்யலாம்.
பிரதி வாரம் புதன்கிழமை தோறும் எந்த ஒரு இடைத்தரகர்களும் இன்றி பருத்தி ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தாங்கள் உற்பத்தி செய்துள்ள பருத்தியை நல்ல விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.
நிரந்தர பதிவு எண்
ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு நகல், போன் நம்பர் ஆகியவற்றை கொடுத்து நிரந்தர பதிவு எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.