< Back
மாநில செய்திகள்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு  திருமணம்
திருச்சி
மாநில செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு திருமணம்

தினத்தந்தி
|
12 Sept 2023 1:07 AM IST

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 14 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.

திருமணம்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. அமைச்சர் கே.என். நேரு தலைமை தாங்கி திருமணங்களை நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில், கலெக்டர் பிரதீப்குமார், திருச்சி மேயர் அன்பழகன், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பிரகாஷ், சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, துணை ஆணையர் லட்சுமணன், கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள், மணமக்களின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் மேலாளர் முருகன், கண்காணிப்பாளர்கள் ஸ்டாலின் குமார், காளியப்பன், ஹேமலதா மற்றும் செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

சீர்வரிசைகள்

திருமண ஜோடிகளுக்கு ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசைகள் வழங்கப்பட்டன. மாரியம்மன் உருவப்படம், மஞ்சள், மணமகன், மணமகளுக்கு மெட்டி, பட்டு வேட்டி, சட்டை மற்றும் மணவிழா பொருட்கள், அலங்காரப் பொருட்கள், அழகு சாதன பொருட்கள், சீர்வரிசையாக இரும்பு கட்டில், மெத்தை, கோரை பாய், மெத்தை விரிப்பு, தலையணை, மிக்சி, கிரைண்டர் மற்றும் பலகார குடம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மேலும், ஒவ்வொரு ஜோடிக்கும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டன.தொடர்ந்து மணமக்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்