பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநின்ற 139 மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை-முதன்மை கல்வி அலுவலர் தகவல்
|பெரம்பலூர் மாவட்டத்தில் இடைநின்ற 139 மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் 49 அரசு உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் 42 அரசு மேல்நிலை பள்ளிகள் என 91 அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல் ஆலத்தூர் தாலுகா காரை ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மை குழுக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் கலைச்செல்வி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர்கள் ஜெய்சங்கர், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உயர்கல்வி பயில நடவடிக்கை
கூட்டத்தில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 2022-23-வது கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ள நிலையில் உடனடி தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்று இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் மற்றும் இடைநின்ற மாணவர்கள் என 139 மாணவர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அல்லது அரசு பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களில் சேர்ந்து கொள்வது மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவது குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு மாணவர்கள் உயர்கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தெரிவித்தார்.