< Back
மாநில செய்திகள்
மக்கள் நீதிமன்றம் மூலம் 1,363 வழக்குகளுக்கு தீர்வு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

மக்கள் நீதிமன்றம் மூலம் 1,363 வழக்குகளுக்கு தீர்வு

தினத்தந்தி
|
9 Sep 2023 8:24 PM GMT

குமரி மாவட்டத்தில் 5 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் 1,363 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் இழப்பீடு தொகையாக ரூ.8¼ கோடி வழங்கப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 5 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் 1,363 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் இழப்பீடு தொகையாக ரூ.8¼ கோடி வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியை முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான அருள்முருகன் தொடங்கி வைத்தார்.

தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி கோகுலகிருஷ்ணன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஆஷா கவுசல்யா சாந்தினி, முதன்மை சார்பு நீதிபதி சொர்ணகுமார், இரண்டாம் கூடுதல் சார்பு நீதிபதி அசன் முகமது, குற்றவியல் கோர்ட்டு நீதிபதிபதிகள் விஜயலட்சுமி, தாயுமானவர், மணிமேகலா, நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பாலஜனாதிபதி மற்றும் வக்கீல்கள், வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

1,363 வழக்குகளுக்கு தீர்வு

நேற்று நடந்த தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சொத்து சம்பந்தமான வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வாகன விபத்து சம்பந்தமான வழக்குகள், குடும்ப நல வழக்குகள் போன்றவை எடுத்துக் கொள்ளப்பட்டன. இதுபோல் பத்மநாபபுரம், இரணியல், குழித்துறை மற்றும் பூதப்பாண்டி வட்ட சட்டப்பணிகள் குழுவிலும் நேற்று தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடந்தது.

மாவட்டத்தில் 5 கோர்ட்டுகளிலும் சேர்த்து மொத்தம் 1,972 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,363 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. தீர்வு காணப்பட்ட வழக்குகளின் இழப்பீடு தொகையாக ரூ.8 கோடியே 33 லட்சத்து 28 ஆயிரத்து 751 வழங்க ஆவணம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்