< Back
மாநில செய்திகள்
ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம்

தினத்தந்தி
|
9 Aug 2023 12:15 AM IST

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே ஆண்டில் ரூ.135 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கூடுதலாக குடோன் இல்லாததால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்

திருக்கோவிலூர்

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரில் தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் பயிர்களை அறுவடை செய்து விற்பனைக்காக இங்கு கொண்டு வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் முகவர்கள் இங்கு வந்து பயிர்களை கொள்முதல் செய்கின்றனர்.

இந்த விற்பனை கூடத்தில் நெல், கம்பு, உளுந்து, மணிலா, சோளம், கேழ்வரகு, எள் மற்றும் அனைத்து வகையான பயறு வகைகள் உள்ளிட்ட 25 வகையான தானியங்கள் வரத்து காணப்படும். கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சம் நெல் மூட்டைகள், 27 ஆயிரம் கம்பு மூட்டைகள், 4 ஆயிரம் கேழ்வரகு மூட்டைகள், 30 ஆயிரம் மணிலா மூட்டைகள், 33 ஆயிரம் உளுந்து மூட்டைகள், 1 லட்சம் சோளம் மூட்டைகள், 13 ஆயிரம் எள் மூட்டைகள் மற்றும் இதர தானியங்களும் விற்பனையாகியுள்ளன.

40 ஆயிரம் மெட்ரிக் டன்

ஆக மொத்தத்தில் சுமார் 40 ஆயிரம் மெட்ரிக் டன் தானியங்கள் கொள்முதல் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் ரூ.135 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. சுமார் 70 ஆயிரம் விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவ்வளவு சிறப்பு மிக்க ஒழுங்குமுறை விற்பனை கூடம் மாநில அளவில் 7-வது இடத்திலும், மாவட்ட அளவில் 2-வது இடத்திலும் உள்ளது. ஆனால் இங்கு போதிய குடோன் வசதி மற்றும் பணியாளர்கள் இல்லாததால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இங்கு பயிர்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகளில் ஒரு பகுதியினர் தினசரி பண பட்டுவாடா செய்வதை இன்னமும் உறுதி செய்யப்படாத நிலையில் உள்ளது. அதேபோல் விற்பனை கூடத்துக்கு வரும் விவசாயிகளிடம் சாக்கு மாற்றுவதற்கு எடை பணி தொழிலாளர்கள் பணம் வாங்க கூடாது என்ற உத்தரவு இருக்கும் நிலையிலும் மூட்டை ஒன்றுக்கு ரூ.20 முதல் 30 வரை விவசாயிகளிடம் பணம் கேட்டு வாங்குகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.

வீணடிக்கப்படுகின்றன

மேலும் எடை போட்டு, சாக்கு மாற்ற பணம் தராத விவசாயிகளின் விளை பொருட்கள் அங்கே வீணடிக்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், போதிய அளவில் குடோன் வசதி, பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் புகார் குறித்து ஒழுங்கமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரவணனிடம் கேட்டபோது, அவர் இது போன்ற புகார்கள் எதுவும் தன்னிடம் வரவில்லை, புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்