< Back
மாநில செய்திகள்
133-வது பிறந்த நாள் விழா: அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மரியாதை - அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

133-வது பிறந்த நாள் விழா: அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மரியாதை - அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர்

தினத்தந்தி
|
15 April 2023 2:53 PM IST

அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி திருவள்ளூர் பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். திருவள்ளூர் ஆயில்மில் அருகே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நிர்வாகிகள் பாலசிங்கம், நீலவானத்து நிலவன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், புரட்சி பாரதம் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஸ்ரீதர், சி.பி.குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பா.ஜ.க நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள், அமைப்பினர், பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவள்ளூரில் இருந்து ஆயில் மில் வரை ஊர்வலமாக ஜே.என்.சாலையில் வந்தனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் ஜெயவேலு தலைமை தாங்கினார். பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜான்சி ராணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைதொடர்ந்து கடம்பத்தூர், பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம், நரசிங்கபுரம், மப்பேடு, கீழச்சேரி, பண்ணூர் போன்ற பகுதிகளில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருஉருவப் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர். பேரம்பாக்கம், சிற்றம்பாக்கம் கிராமத்தில் அ.தி.மு.க.வின் கடம்பத்தூர் ஒன்றிய தலைவர் சிற்றம் ஜெ.சீனிவாசன் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்