கோயம்பேட்டில் அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகள் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
|கோயம்பேடு உணவு தானிய அங்காடியில் அயோடின் கலக்காத 13 டன் உப்பு மூட்டைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை,
சென்னை கோயம்பேடு உணவு தானிய அங்காடி வளாகத்தில் உள்ள குடோன் ஒன்றில் சில பொருட்கள் ரகசியமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. துறையின் சென்னை மாவட்ட நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று அந்த குடோனுக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு மூட்டை மூட்டைகளாக உப்பு இருந்ததும், அவை அயோடின் கலக்காத உப்பு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 13 டன் அளவிலான அந்த உப்பு மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சதீஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,
''அயோடின் கலந்த உப்பை தான் நாம் பயன்படுத்த வேண்டும். ஆனால் கைப்பற்றப்பட்ட உப்பில் அயோடின் இல்லை. தவிர அந்த மூட்டைகளில் எந்த லேபிளும் இல்லை.
உணவு தானிய அங்காடியில் இந்த உப்பு எதற்காக கொண்டுவரப்பட்டது? என்று விசாரணை நடத்தி வருகிறோம். குடோனுக்கு சொந்தக்காரர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட 2 இடங்களில் சோதனை நடத்தவும் உள்ளோம் என்றார்.