தமிழக மீனவர்கள் 13 பேர் கைது: சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு இந்தியா முடிவு கட்டுவது எப்போது? - ராமதாஸ்
|வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-
வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்கள் பயணித்த 3 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்திருக்கிறது. தமிழக மீனவர்கள் அவர்கள் காலம்காலமாக மீன் பிடித்து வரும் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது சிங்களக் கடற்படையினர் அத்துமீறி நுழைந்திருப்பது கண்டிக்கத்தக்கது.
2023-ஆம் ஆண்டில் தமிழக மீனவர்கள் 240 பேரை சிங்களக் கடற்படை கைது செய்திருந்தது. அவர்களின் 35 படகுகளையும் பறிமுதல் செய்திருந்தது. பறிக்கப்பட்ட படகுகள் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்ட மீனவர்களில் கடைசி 13 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் விடுதலை செய்யப்பட்டனர். அதற்குள்ளாகவே அடுத்த கைது நடவடிக்கையை சிங்களக் கடற்படை நிகழ்த்தியிருக்கிறது. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முடக்க வேண்டும்; தமிழர் திருநாளை கொண்டாடாமல் அவர்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் சிங்களக் கடற்படை இவ்வாறு செய்திருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடிக்கும் அதிகாரம் தமிழக மீனவர்களுக்கு உண்டு. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்வதை மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது. ஆனால், தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநிறுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது. இந்த அத்துமீறல்களுக்கு உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும்.
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் எந்த நெருக்கடியும், அச்சுறுத்தலும் இல்லாமல் மீன்பிடிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளை மீட்கவும் மத்திய, மாநில அரசுகள் போர்க்கால வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.