மியான்மரில் இருந்து மீட்கப்பட்ட 13 தமிழர்கள் சென்னை வந்தனர்
|மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தடைந்தனர்.
சென்னை,
தாய்லாந்தில் வேலை எனக்கூறி 60 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர் ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும் பொருட்டு தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்பட்டு உள்ளனர்.
சட்டவிரோத வேலைகளை அவர்கள் செய்ய மறுத்தால் வேலை அளிப்போரால் மின்சாரம் பாய்ச்சி கடுமையாக தண்டிக்கப்படுவதாகவும், பிணைக்கைதிகளாக அவர்கள் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அதனையடுத்து எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு நேற்று இரவு டெல்லி வந்தடைந்தனர்.
அதன்பின், டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2.20 மணியளவில் சென்னை வந்தடைந்தனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.