கரூர்
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 13 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்
|இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 13 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு ஆண்டுதோறும் இலவச திருமணம் செய்து வைக்கப்படுவது வழக்கம். அதன்படி திருப்பூர் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 13 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமண நிகழ்ச்சி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை கரூர் உதவி ஆணையர் நந்தகுமார், ஜெயதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தலைமையில் மணமக்களின் உறவினர்கள் முன்னிலையில் 13 ஏழை ஜோடிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 13 ஜோடிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களான பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், ைகடிகாரம், மிக்சி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. மேலும் மணமக்கள் உறவினர்களுக்கு விருந்து வழங்கப்பட்டது. இந்த விழாவில் கோவில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.