சென்னையில் 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் ஐ.டி. ஊழியர் ஆண் நண்பருடன் கைது
|சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சென்னை,
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அவ்வப்போது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். இது குறித்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில், போதைப்பொருள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் காவல்துறையினர் அதிரடியாக அந்த விடுதி அறையில் சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த 1.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அந்த அறையில் வசித்த இளம்பெண்ணிடம் விசாரித்தபோது, புதுக்கோட்டையை சேர்ந்த ஷர்மிளா என்பதும், பட்டதாரி பெண்ணான அவர், ஓஎம்ஆர் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நண்பரும், கால் டாக்சி ஓட்டுநருமான சுரேஷ் என்பவர் கஞ்சாவை கொடுத்ததாகக் கூற, சுரேஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், கால் டாக்சி ஓட்டுநர் என்ற போர்வையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் கஞ்சாவை, சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் வேலையை சுரேஷ் செய்து வந்தது விசாரணையில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, பெண் ஐ.டி. ஊழியர் ஷர்மிளா மற்றும் சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விவகாரத்தில் பெண் ஐ.டி. ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.