12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வருகிற 24-ம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்
|தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது
சென்னை,
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
கடந்த கல்வியாண்டில் 12ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவினை மதிப்பெண் பட்டியலாக வரும் வருகிற 24-ம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
பட்டியலை http://www.dge.tn.in என்ற முகவரிக்குள் சென்று Result என்ற வாசகத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் பக்கத்தில் "HSE Second Year Supplementary Exam, Jun/Jul 2023. Result-Statement Of Marks Download" என்ற வாசகத்தை தேர்வு செய்து தேர்வர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களது மதிப்பெண் பட்டியலினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.
ஜூன்/ஜூலை 2023, மேல்நிலை துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு ஜூலை 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மாவட்டங்களில் (தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மயிலாடுதுறை செங்கல்பட்டு) முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு சென்று தேர்வர்கள் பதிவு செய்துக்கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒரு பாடத்திற்கும் ரூ.275-ம், மறு கூட்டல் செய்ய உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305-ம், மற்ற பாடங்களுக்கு ரூ.205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.