விருதுநகர்
4,613 பேருக்கு ரூ.129 கோடி கடனுதவி
|பொது மக்கள், வங்கி அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 4,613 பேருக்கு ரூ.129 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரின் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி அதிகாரிகள் கலந்து கொண்ட பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி மங்கள ராம சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 61 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடியே 74 லட்சம் கடன் நேரடியாக வழங்கப்பட்டது. மேலும் 4,613 பயனாளிகளுக்கு ரூ. 129 கோடியே 48 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்கள் வங்கி கடன் உதவி பெறுவது தொடர்பான தங்கள் சந்தேகங்களை நேரடியாக வங்கி அதிகாரிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல மேலாளர் நாகையா வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் ராஜசுரேஸ்வரன், தமிழ்நாடு கிராம வங்கியின் மண்டல மேலாளர் கந்தசாமி, கனரா வங்கியின் மண்டல மேலாளர் ஜக்கலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் நன்றி கூறினார்.