நீலகிரி
பொதுமக்களிடம் இருந்து 128 மனுக்கள் பெறப்பட்டன
|மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 128 மனுக்கள் பெறப்பட்டன.
ஊட்டி
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 128 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலர்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி படிக்கும் 55 மாணவிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் அடையாளமாக, 5 மாணவிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனபிரியா, சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் கல்பனா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஷோபனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.