சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி ஒதுக்கீடு
|மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறினார்.
சென்னை,
2024-25-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் பல்வேறு சிறப்பம்சங்கள் குறித்து அவர் உரையாற்றினார்.
அதில், சென்னை மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக பட்ஜெட்டில் ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில்,
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
இதில், விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரையிலும், பரந்தூருக்கும் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிக்க ரூ.4,577 கோடி மதிப்பில் விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும். கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையிலான மெட்ரோ ரெயில் சேவை, 2025ம் ஆண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்கு ஒப்புதல் வழங்க ஒன்றிய அரசு காலதாமதம் செய்வதால், தமிழ்நாடு அரசுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி வரை கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் சூழலும் உள்ளது." இவ்வாறு அவர் கூறினார்.