தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கு ரூ.2.27 கோடி அபராதம்
|கடந்த மாதம் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களுக்கு மாலத்தீவு அரசு அபராதம் விதித்துள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாலத்தீவு எல்லை அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த மாதம் 23-ம் தேதி மாலத்தீவு கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேருக்கும் அபராதம் விதித்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மாலத்தீவு பணமான ரூபியாவில், மாலத்தீவு எல்லைக்குள் மீன் பிடித்ததாக கூறி 2 லட்சம் ரூபியாவும், வலை பயன்படுத்தி மீன் பிடித்ததாக 20 லட்சம் ரூபியாவும் அபராதம் விதித்துள்ளது. மேலும் உரிமம் இல்லாமல் கடல் பகுதிக்குள் இருந்ததாக 20 லட்சம் ரூபியாவும் அபராதம் விதித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 2.27 கோடி ரூபாய் ஆகும்.