கன்னியாகுமரி
குமரி மீனவர்கள் உள்பட 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்
|மாலத்தீவில் பரிதவித்த குமரி மீனவர்கள் உள்பட 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்.
கொல்லங்கோடு,
மாலத்தீவில் பரிதவித்த குமரி மீனவர்கள் உள்பட 12 பேர் சொந்த ஊர் திரும்பினர்.
விசைப்படகு கடலில் மூழ்கியது
தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் பைஜூ. இவரது விசைப்படகில் இரவிபுத்தன்துறையை சேர்ந்த ஷெரின் ஆன்ட்ரோ, ஷெல்டன், சூசை ரிஜிஸ்ட்டன், தேஜாஸ், சூசன், தூத்தூரை சேர்ந்த ஜோஸ், பூத்துறையை சேர்ந்த சுரேஷ், கேரள மாநிலம் விழிஞ்ஞத்தை சேர்ந்த ஆன்டனி ராஜூ, புதுச்சேரியை சேர்ந்த ஆனந்த், ரமேஷ் மற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிமல் பிசு, அபிஜித் ஆகிய 12 மீனவர்கள் கடந்த மாதம் 7-ந் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
பின்னர் அங்கு மீன்பிடித்து விட்டு தேங்காப்பட்டணம் துறைமுகத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவு நோக்கி சென்ற இழுவை கப்பல் ஒன்று விசைப்படகு மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
மாலத்தீவில் பரிதவித்த மீனவர்கள்
கப்பல் மோதியதில் விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. இதனால் படகில் இருந்த 12 மீனவர்களும் கடலில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைத் தொடர்ந்து மாலத்தீவு கடற்படையினர் அவர்களை மீட்டு மாலத்தீவுக்கு கொண்டு சென்றனர். அங்கு விசாரணை கைதிகளாக மீனவர்கள் இருந்தனர்.
பின்னர் 12 மீனவர்களை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குமரி மீனவர்களின் குடும்பத்தினர் மனு கொடுத்தனர்.
சொந்த ஊர் திரும்பினர்
இதனை தொடர்ந்து மத்திய அரசு இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் அங்குள்ள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. மேலும் மாலத்தீவு வாழ் தமிழர்கள் மீனவர்களுக்கு உதவி செய்தனர்.
அங்கு 4 நாட்களுக்கு பிறகு பாதுகாப்பாக விமானம் மூலம் இந்தியா புறப்பட்டனர். பின்னர் அவர்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சொந்த ஊர் திரும்பினர்். அந்த மீனவர்களை குடும்பத்தினர் கண்ணீர் மல்க கட்டித் தழுவி வரவேற்றனர்.