கன்னியாகுமரி
குமரியில் 12 மதுக்கடைகள் மூடப்பட்டன
|குமரியில் மூடப்பட்ட 12 டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோனுக்கு முறையாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரியில் மூடப்பட்ட 12 டாஸ்மாக் கடைகளில் இருந்து குடோனுக்கு முறையாக மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க 2 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுக்கடைகள் மூடல்
தமிழகத்தில் முதற்கட்டமாக 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
அதன்படி குமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 110 மதுக்கடைகளில் 12 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. அதாவது நாகர்கோவில் மாநகரில் பீச்ரோடு, இளங்கடை, செட்டிகுளம், பரமார்த்தலிங்கபுரம் மற்றும் வடசேரி பஸ் நிலையம் அருகே ஆகிய இடங்களில் உள்ள 5 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
வருமானம் பாதிக்காது
மேலும் அருமனை, தக்கலை, இரும்பிலி, கழுவன்திட்டை, சாண்டம், அஞ்சுகிராமம், மருங்கூர் ஆகிய இடங்களில் உள்ள மதுக்கடைகளிலும் நோட்டீஸ் ஒட்டி மூடப்பட்டன. இந்த மதுக்கடைகள் அனைத்தும் ஒரே இடத்தில் அருகருகே உள்ள கடைகள் மற்றும் விற்பனை குறைவாக உள்ள கடைகள் ஆகும்.
ஒரு கடை மூடப்பட்டால் அருகே உள்ள வேறு ஒரு கடைக்கு சென்று மதுபிரியர்கள் மதுபானத்தை வாங்கி விடுவார்கள். அப்படி பார்க்கும் போது மொத்த விற்பனையில் பாதிப்பு இருக்காது என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறினர். 12 மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில் தற்போது குமரியில் மதுக்கடைகளின் எண்ணிக்கை 98 ஆக குறைந்துள்ளது.
அதிகாரிகள் கண்காணிப்பு
இந்த நிலையில் கடைகள் மூடப்பட்டதற்கான நோட்டீசை டாஸ்மாக் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட 12 கடைகளிலும் நேற்று ஒட்டினார்கள். அப்போது கடைகள் மூடப்பட்டது தெரியாமல் சில மது பிரியர்கள் மதுபானம் வாங்க வந்திருந்தனர். கடை திறக்காமல் நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்ததை பார்த்த அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதே சமயத்தில் வேறு மதுக்கடையை தேடி சென்றனர். மேலும் மூடப்பட்டுள்ள மதுக்கடைகளில் மதுபாட்டில்கள் இருப்பு குறித்த விவரம் எண்ணப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அங்கிருந்த மதுபானங்கள் குடோனுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதே சமயத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளில் இருந்த மதுபானங்கள் முறையாக குடோனுக்கு கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்காணிக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில் 2 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் திருப்பதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி நாகராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்களும் உடனே களத்தில் இறங்கி கண்காணித்து வருகின்றனர்.