< Back
மாநில செய்திகள்
விவசாயியிடம் ரூ.12½ லட்சம் மோசடி
கரூர்
மாநில செய்திகள்

விவசாயியிடம் ரூ.12½ லட்சம் மோசடி

தினத்தந்தி
|
7 March 2023 6:17 PM GMT

ஆன்லைன் மூலம் பழகி விவசாயியிடம் ரூ.12½ லட்சம் மோசடி செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆன்லைன் மூலம் பழக்கம்

கரூர் மாவட்டம் தென்னிலை கூனம்பட்டி அருகே உள்ள பிரகபாளையத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 46). விவசாயியான இவரது பேஸ்புக் இணையதளத்திற்கு லிசாபால் என்ற பெயரில் தொடர்பு கொண்ட ஒருவர் பெண்போல் பேசி அவருடன் பழகியுள்ளார். பிறகு அவரது வாட்ஸ்-அப் நம்பரிலும் பழகியுள்ளார். அதனை அடுத்து தங்களுக்கு பரிசு பொருட்களை அனுப்ப உள்ளதாக கூறி அவரது முகவரியை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி டெல்லியில் இருந்து பேசிய ஒருவர் தான், கூரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும் தங்களுக்கு இங்கிலாந்தில் இருந்து பார்சல் ஒன்று வந்து உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அதற்கு கூரியருக்கு செலுத்த வேண்டிய தொகையாக ரூ.25,999-ஐ செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து மனோகரன் அதற்கான தொகையை அவர்கள் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

மோசடி

பின்னர் மீண்டும் தொடர்பு கொண்ட அவர்கள் கரன்சியை ரூபாயாக மாற்ற வரி கட்டணமாக ரூ.6 லட்சத்து 35 ஆயிரத்து 200 செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதனையும் மனோகரன் செலுத்தியுள்ளார். பின்பு பிரின்ஸ் அமெலிலா என்பவர் மனோகரன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் நம்பரில் பேசி பழகியதுடன் தங்களை சந்திப்பதற்காக இந்தியா வர உள்ளதாக கூறியுள்ளார்.

இதனை அடுத்து கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி மனோகரனுக்கு போன் ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர் தாங்கள் மும்பை ஏர்போர்ட்டில் இருந்து பேசுவதாகவும், பிரின்ஸ் அமெலிலா ஏர்போர்ட்டில் சுங்க அனுமதி வழங்க இந்திய ரூபாயில் பணம் தேவை என கூறியுள்ளனர். இதையடுத்து அதற்கான தொகை ரூ.65,500-யை செலுத்தியுள்ளார்.

போலீசார் விசாரணை

பிறகு அன்று மாலை அவருக்கு போன் செய்த நபர் பிரின்ஸ் அமெலிலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், சிகிச்சைக்காக பணம் தேவை என கேட்டுள்ளனர். மேலும் அதற்குரிய தொகை ரூ.5 லட்சத்து 19 ஆயிரத்தை மனோகரன் செலுத்தியுள்ளார். இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மனோகரன் இதுகுறித்து கரூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணி வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்