அரியலூர் பட்டாசு ஆலை விபத்தில் 12 பேர் பலி - உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
|அரியலூர் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் ஊராட்சி விரகாலூர் கிராமத்தில் கடந்த 15 ஆண்டுகளாக யாழ் அன்ட் கோ என்ற பெயரில் நாட்டுவெடி தயாரிப்பு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையை ராஜேந்திரனின் மருமகன் அருண்குமார் (வயது 35) என்பவர் நிர்வகித்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று காலை ஆலையில் பட்டாசுகள் தயாரிப்பு பணியில் 2 பெண்கள் உள்பட சுமார் 35 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென ஆலையில் தயாரித்து வைத்திருந்த வெடிகள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 2 பெண்கள் உள்பட 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் தஞ்சை, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை அறிந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திரனும், அவரது மருமகன் அருண்குமாரும் தலைமறைவாகினர். அவர்களை தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், ஆலை உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மருமகன் அருண்குமார் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.