தஞ்சாவூர்
ரூ.12½ கோடி இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி
|ரூ.12½ கோடி இடத்தை கையகப்படுத்திய மாநகராட்சி
தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.12½ கோடி மதிப்பிலான இடத்தை கையப்படுத்தியதோடு, ஆக்கிரமிப்பாளர்கள் 16 பேருக்கு நோட்டீசும் வழங்கப்பட்டு அறிவிப்பும் செய்யப்பட்டது.
மாநகராட்சிக்கு சொந்தமான இடம்
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்கள், நிலங்கள் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தன. இவற்றை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கண்டறிந்து அதனை அகற்றி கையகப்படுத்தி வருகிறார். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோவில் அருகே பாலத்தின் வலதுபுறம் பகுதியில் அகழிகரையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை 16 பேர் ஆக்கிரமித்து கட்டிடங்களை பலதலைமுறைகளாக பயன்படுத்தி வருகின்றனர்.
16 பேருக்கு நோட்டீசு
இந்த இடத்தில் ஜவுளிக்கடை, ஓட்டல், டீக்கடை, பாத்திரக்கடை, பாலீஸ் பட்டறை உள்பட பல்வேறு கடைகள் உள்ளன. வீடுகளும் இதில் உள்ளன. இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு மாநகராட்சி வலியுறுத்தி வந்தது.
இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் இந்த இடத்தை கையகப்படுத்தும் நோக்கில் நேற்று ஆக்கிரமிப்பாளர்கள் 16 பேருக்கும் நோட்டீசு வழங்கினர். மேலும் வீடு, கடைகளிலும் இது தொடர்பான நோட்டீசை ஓட்டினர்.
ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு
மாநகராட்சி உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் தலைமையில் உதவி பொறியாளர்கள் மகேந்திரன், கண்ணதாசன், ஆறுமுகம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வந்து இந்த நோட்டீசை ஓட்டினர். மேலும் ஒலி பெருக்கி மூலமும், இது தொடர்பான அறிவிப்பை மாநகராட்சி அதிகாரிகள் வெளியிட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான இடம் 17 ஆயிரத்து 880 சதுரஅடி பரப்பளவில் கடைகள், வீடு என பல ஆண்டுகாலமாக ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.12½ கோடிக்கு மேல் இருக்கும். இதனை ஆக்கிரமித்துள்ள 16 பேருக்கும் நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.
சட்டப்படி நடவடிக்கை
தமிழ்நாடு பொது வளாகங்கள் (ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல்) சட்டத்தின்படி தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மாநகராட்சி வசம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த இடத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் "என்றனர்.