தேனி
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
|உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
பிளஸ்-1 மாணவர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோவிந்தன்பட்டியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மார்ட்டின் (வயது 16). இவர் ராயப்பன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை மார்ட்டின் தனது நண்பர்களுடன் உத்தமபாளையத்தில், முல்லைப்பெரியாறு தடுப்பணை பகுதியில் குளிக்க சென்றார். அங்கு அவர், ஆற்றினுள் உள்ள பாறை பகுதியில் நின்று குளித்ததாக கூறப்படுகிறது.
அப்போது நிலைதடுமாறி மார்ட்டின் ஆற்றில் தவறி விழுந்தார். கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்ததால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே ஆற்றில் விழுந்த மார்ட்டின் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டார். மார்ட்டின் நீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள், உடனடியாக உத்தமபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் உத்தமபாளையம் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள், ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மாணவரை தேடும் பணி மாலையில் நிறுத்தப்பட்டது.
ஆற்றில் மூழ்கி பலி
இதற்கிடையே நேற்று 2-வது நாளாக முல்லைப்பெரியாற்றில் மாணவரை தேடும் பணி நடைபெற்றது. இதற்காக ஆற்றில் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. பின்னர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் உத்தமபாளையம், அம்மாபட்டி, குச்சனூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடினர். அப்போது உத்தமபாளையத்தில், ஆற்றில் பாறையின் இடுக்கில் மாணவரின் உடல் சிக்கியிருந்தது. இதையடுத்து அவரது உடலை தீயணைப்பு படைவீரர்கள் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முல்லைப்பெரியாற்றில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் உத்தமபாளையத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.