11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் திறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - 9-ந்தேதி கடைசி நாள்
|11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான திறனறி தேர்வு அக்டோபர் 1-ந்தேதி நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பள்ளி மாணவ-மாணவிகள் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகி பங்குபெறுவதைப் போன்று, தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தி கொள்ளும் வகையில் திறனறித் தேர்வு, அரசு தேர்வுகள் இயக்ககம் மூலமாக நடைபெற உள்ளது.
2022-2023-ம் கல்வியாண்டில் அரசு பள்ளி மற்றும் அனைத்து வகை பள்ளியில் படிக்கும் (சி.பி.எஸ்.இ/ஐ.சி.எஸ்.இ) 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் இத்தேர்வை எழுத வருகிற 9-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு தமிழ்ப்பாடம் இதற்கான பாடத்திட்டம் ஆகும். இந்த தேர்வு கொள்குறி வகையில் (அப்ஜெக்டிவ் டைப்) நடைபெறும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வீதம் 100 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்படும். இத்தேர்வு அக்டோபர் 1-ந்தேதி 10 மணி முதல் பகல் 12 மணி வரை நடைபெறும்.
இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை மேற்கண்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்வில் வெற்றிபெறும் 1,500 மாணவ-மாணவிகளில் 750 அரசு பள்ளி மாணவர்களுக்கும், 750 இதர பள்ளி மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 (2 ஆண்டுகளுக்கு) வழங்கப்பட இருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.