119-வது பிறந்தநாள்: சி.பா.ஆதித்தனார் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
|தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தினத்தந்தி குழுமத்தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மற்றும் தினத்தந்தி இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கீழே உள்ள உருவ படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன், சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இவர்களை தவிர, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.