நீலகிரி
116-வது மலை ரெயில் தின கொண்டாட்டம்
|ஊட்டி ரெயில் நிலையத்தில் 116-வது மலை ரெயில் தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஊட்டி ரெயில் நிலையத்தில் 116-வது மலை ரெயில் தினம் கொண்டாடப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலை ரெயில்
சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரியில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலை ரெயில் உள்ளது. கடந்த 1898-ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை மலை ரெயில் இயக்கப்பட்டது. அதன் பின்னர் 1908-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி முதல் ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டு மலை ரெயில் இயக்கம் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நூற்றாண்டை கடந்த மலை ரெயிலுக்கு கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜின் மூலம் மலை ரெயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.
இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இந்த மலை ரெயிலின் 116-வது தினம் ஊட்டி ரெயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட உதவி இயக்குனர் சுப்ரமணி, ஊட்டி நிலைய அதிகாரி மணிகண்டன் ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடினர். மேலும் சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு மற்றும் கேக் வழங்கி வரவேற்பு அளித்தனர். மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், தோடர் இன மக்கள் பாரம்பரிய நடனமாடினர்.
நீலகிரி மலை ரெயில் பாதுகாப்பு சங்க நிர்வாகி நடராஜ் மற்றும் நிர்வாகிகள், மலை ரெயிலில் ஊட்டிக்கு வந்த ரெயில் என்ஜின் டிரைவர், சுற்றுலா பயணிகளுக்கு பூக்கள் கொடுத்து வரவேற்றனர். மேலும் இனிப்புகள் வழங்கி, மலை ரெயிலின் சிறப்புகள் பற்றி விளக்கி பேசினர்.
இதுகுறித்து விழா ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், சுற்றுலா மக்களின் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சுற்றுலா பயணிகளை கவர கூடுதல் வழிமுறைகளை கையாள வேண்டும் என்றனர்.