< Back
மாநில செய்திகள்
115-வது ஜெயந்தி விழா: சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை
மாநில செய்திகள்

115-வது ஜெயந்தி விழா: சென்னையில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

தினத்தந்தி
|
30 Oct 2022 11:48 PM GMT

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழாவையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

சென்னை,

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை நேற்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டது. சிலைக்கு கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கும், உருவப்படத்துக்கும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பாலு எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நிலைக்குழு தலைவர் தனசேகரன், மண்டலக்குழு தலைவர் எஸ்.மதன்மோகன், எம்.எல்.ஏ.க்கள் த.வேலு, தாயகம் கவி, வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.பி.மணி, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் வீ.ப.ஜெயசீலன் உள்பட அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். அவருடன் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், கே.பி.முனுசாமி, டி.ஜெயக்குமார், கோகுல இந்திரா, வைகை செல்வன், மாவட்ட செயலாளர்கள் விருகை வி.என்.ரவி, ஆர்.எஸ்.ராஜேஷ், சிறுபான்மையினர் நலப்பிரிவு துணை செயலாளர் எம்.ஏ.சேவியர், முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்தன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் மாவட்ட தலைவர்கள் எம்.ஏ.முத்தழகன், சிவராஜசேகரன் உள்பட பலரும் மரியாதை செலுத்தினர்.

பா.ஜ.க., பா.ம.க.

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் மாநில செயலாளர் சதீஷ்குமார், மாவட்ட செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து பா.ஜ.க. மாநில செயலாளரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான (பொறுப்பு) கராத்தே ஆர்.தியாகராஜன் தலைமையில் மாவட்ட துணை தலைவர் நாச்சிக்குளம் சரவணன் உள்பட நிர்வாகிகள் மாரியாதை செலுத்தினர்.

பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வே.வடிவேல் உள்பட நிர்வாகிகள், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராஜேந்திரன், அன்பு தென்னரசு, ராவணன், ஜெகதீசபாண்டியன் உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தே.மு.தி.க., அ.ம.மு.க.

தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா தலைமையில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் உள்பட நிர்வாகிகள், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன், துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உள்பட நிர்வாகிகள்,

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ஜி.செந்தமிழன் தலைமையில் மாவட்ட செயலாளர் இல.ராஜேந்திரன், செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்பட நிர்வாகிகள், சமத்துவ மக்கள் கழக மாநில மாணவர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன், துணை செயலாளர் டி.விநாயகமூர்த்தி உள்ளிட்டோர், முன்னாள் கவுன்சிலர் ஸ்டார் எம்.குணசேகரன் தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து, திரைப்பட தயாரிப்பாளர் கே.சி.ரவிதேவன், நடிகர் எஸ்.வி.சேகர், ம.பொ.சி. பேரன் பா.செந்தில், ம.பொ.சி. அறக்கட்டளை நிறுவனர் கா.தி.பாஸ்கரன், தமிழ்நாடு மண்பாண்ட (குலாலர்) சங்க தலைவர் சேம.நாராயணன், சென்னை லா அசோசியேஷன் அமைப்பு நிர்வாகிகள் ஜோசப், சுபாஷினி, அமர்,

தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேஷ் நாடார், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை பொதுச்செயலாளர் கே.சி.ராஜா, தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார், முக்குலத்தோர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் எம்.பிரவின்குமார், அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பால்குடம், முளைப்பாரி ஏந்தி வழிபாடு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த முக்குலத்தோர் தேவர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஏந்தி வந்து வழிபட்டனர். அதேபோல புதுப்பேட்டை, வேளச்சேரி பகுதிகளில் இருந்து தேவர் இளைஞர் அணியை சேர்ந்த ஏராளமானோர் தொடர் ஓட்டமாக ஜோதியை ஏந்தி வந்தனர்.

முக்குலத்தோர் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் 11-ம் ஆண்டாக அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.

டெல்லி நாடாளுமன்ற வளாகம்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது ஜெயந்தி விழாவையொட்டி, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் தலைமையில் ராஜூ பிஸ்தா எம்.பி. மற்றும் டெல்லி வாழ் தமிழ் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பட்டுக்கோட்டையில் முத்துராமலிங்க தேவரின் உருவப்படத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்