கரூர்
புகழூர் காகித ஆலை மேலாளர் வீட்டில் 115 பவுன் நகைகள் கொள்ளை
|வேலாயுதம்பாளையம் அருகே புகழூர் காகித ஆலை மேலாளர் வீட்டில் 115 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
115 பவுன் நகைகள் கொள்ளை
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகழூர் செய்தித்தாள் காகித ஆலையில் (டி.என்.பி.எல்.) ஸ்டோர் மேலாளராக பணியாற்றி வருபவர் அண்ணாமலை(வயது 55). இவர் காகித ஆலை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6-ந்தேதி அன்று அண்ணாமலை தனது மகளின் படிப்புக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் காகித ஆலை காவலாளி காகித ஆலை குடியிருப்பு வளாகத்தில் உள்ள சி43 பகுதிக்கு ரோந்து சென்றுள்ளார்.
அப்போது அண்ணாமலை வீட்டின் கதவு திறந்து இருந்துள்ளது. இதுகுறித்து அவர் உடனே துணை மேலாளரிடம் தெரிவித்துள்ளார். துணை மேலாளர் இதுகுறித்து உடனடியாக சென்னையில் இருந்த அண்ணாமலைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததும் சென்னைக்கு சென்றிருந்த அண்ணாமலை உடனடியாக குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த துணிமணிகள் கலைந்து கிடந்தன. மேலும் வீட்டின் அறைக்குள் இருந்த பீரோ, மேஜையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. மேலும் அதில் வைத்திருந்த வளையல், தோடு, செயின் உள்பட 115 பவுன் நகைகள், 600 கிராம் வெள்ளி கொலுசுகள், பணம் ரூ.10 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தடயங்கள் சேகரிப்பு
உடனே இதுகுறித்து அண்ணாமலை வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்துவிட்டு, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- புன்னம்சத்திரம் செல்லும் சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், குடியிருப்பு வளாகத்திற்கு செல்லும் பாதையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், குடியிருப்பு வளாகம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதியில் காகித ஆலை நிறுவனம் சார்பில் பாதுகாப்பு பணியில் காவலாளியை பணியில் அமர்த்தி இருந்தும், குடியிருப்பு வளாகத்துக்குள்லேயே கொள்ளை சம்பவம் நடந்துள்ளது இப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.