காஞ்சிபுரம்
'மாண்டஸ்' புயலால் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம்
|மாண்டஸ் புயல் காரணமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் 110 வீடுகள் சேதம் அடைந்ததாக கலெக்டர் ஆர்த்தி தெரிவித்தார்.
110 வீடுகள் சேதம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
காஞ்சீபுரத்தில் தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக 18 செ.மீ.மழை பெய்திருப்பதுடன் மாவட்டம் முழுவதும் மொத்தம் 80 செ.மீ. அளவு மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். 110 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. 31 கால்நடைகளும், 2,680 கோழிகளும் உயிரிழந்துள்ளன. மாவட்டம் முழுவதும் 65 முகாம்களில் 278 குடும்பங்களை சேர்ந்த 2,240 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக 2 நாட்களுக்கு முன்னதாகவே நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டு, 65 முகாம்களில் 278 குடும்பங்களை சேர்ந்த 2,240 பேர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
203 மரங்கள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 203 மரங்கள் விழுந்துள்ளதாக பதிவாகி அதில் 151 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 52 மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கம்பங்கள் சேதமான வகையில் காஞ்சீபுரத்தில் 117 மின்கம்பங்களும், ஸ்ரீபெரும்புதூரில் 21 கம்பங்களும் சேதம் அடைந்துள்ளது.
இவற்றை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. காஞ்சீபுரத்தில் 11 குழுக்களும், ஸ்ரீபெரும்புதூரில் 7 குழுக்களும் நியமித்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது,
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்பிரமணியன், கூடுதல் கண்காணிப்பு அலுவலர்கள் ஹரிஹரன், விஜயராஜ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.